Pages

Wednesday, 30 September 2009

நேய நாயகி

உடல்களை தின்பது குறித்த
கரையான்களுடனான உரையாடலின்
போது யட்சி வந்தாள்
முனீஸ்வரனுக்கு படைத்த சாராய
புட்டியை திருடிக் கொண்டு

கைமாற்றிய மிடறில் துரு வாசனை அடித்தது

இறந்த குழந்தை வளர்ந்த படி இருக்கும்
கனவுடையவளின் கூடலை ஆசிர்வதித்தாள்

பெரு வியாதிக்காரனின் மரணத் திகதியை
தாயம் ஆறுக்கு மாற்றி வைத்தாள் ஆட்டத்துக்கு
நடுவே

பின் இருவரும் சன்னாசி அப்பன் திடலுக்கு சென்று
தலைச்சன் பிள்ளை தலை மழிக்கும் விருந்தில்
கிடா இரத்தம் குடித்துக் கொண்டிருந்தவனிடம்
சுருட்டு வாங்கி குடித்தோம்

சித்தன் ஆடைகளை பிழிந்து தோள் மீது
போட்டுக் கொண்டு ஓட்டை மடையில்
குடலை சைக்கிள் டியுபில்
பஞ்சர் பார்ப்பது போல் கழுவிக் கொண்டிருந்தான்
யட்சி தொடையில் கிள்ளி கண்ணடித்து
இரண்டையும் இடம் மாற்றினாள்

அடியே கருவாச்சி வந்துட்டியா
எங்க மூக்குச் சில்லு ஒடயாத பயலோட
என்றான் சித்தன் திரும்பாமலே

கரட்டுப் பக்கம் முனியாட்டம் பார்க்கலாமுன்னுதென்
என்றாள் தோளோடு அணைத்தபடி

சன்னாசியும் அய்யனும் குருத பூட்டுர
சாமமாச்சுது பொழுதோட போ தாயி என்றான்

மூன்றாம் சாமமிருக்கும் படுக்கையில்
புரண்ட போது சலங்கையொலிக்க குதிரைக் குளம்படி
பெரும் செருமலுடன் கடந்தது

பானக வாசத்தில் ப்ரம்ம வேளையில் விழித்த பொது
கழுத்தில் யட்சியின் கருகமணி

தங்கை பூட்டின வீட்டிற்குள்
எப்படி நுழைகிறேனென்ற ஆதிக்கேள்வியை இன்றும்
துவங்கிய போது மஞ்சள் குளித்த பிள்ளைக் கனவுக்காரி
வாசல் கடந்தாள்
சுழித்த புன்னகையுடன்

No comments:

Post a Comment