Pages

Wednesday, 30 September 2009

படித்ததில் பிடித்த

மணல் குறிப்புகள் - 1

ஒரு கோமாளியின் முகமூடியுடனிருந்த நானும் பெருங்கருணைக்குரிய பெண்ணின் முகம் வரைந்த நீயும் சந்தித்த அந்த நாளின் நாட்குறிப்பு ஒரங்கள் மடிக்கப்பட்டு வர்ணப் பேனாக்களால் அடிக்கோடிடப்பட்ட வாசகங்களைக் கொண்டிருந்தது. தற்செயலுக்கு முன் தீர்மானிக்கபட்ட அற்புதம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம் .அணுக்கம் பெருக்க கனவுகள்,வர்ணங்கள்,இசை வடிவங்கள்,புத்தகங்கள்,பாடல்கள்,திரைப் படங்கள்,பருவகாலங்கள் மற்றும் சிந்தனைகள் அனைத்திலும் நாம் ஒத்தவர்களாக பிணைக்கபட வேண்டிய இரண்டு குரோமோசோம்களாக அறிவித்துக் கொண்டோம்.துடிப்பை உணர மார்பு வெளியில் அலைபேசி வைத்து அழுத்தி காட்டும் அபத்த இரவுகளை இரையாக்கி நமதேயான செல்லுலோஸ் இழைக்கப்பட்ட அரக்கு உலகை உருவாக்கினோம்.அங்கு மெழுகினால் ஆன கற்கள் இரைந்து கிடந்தன பனிப்பாறைகளிடயே பெருகி வரும் வென்னீர் ஊற்றுகளின் கண்ணாடி கரைகளில்.பருவங்கள் ஒரே நாளில் நிகழ்ந்து மாறும் பூக்களை உடைய தோட்டங்களை சிந்தசைஸ் செய்த பறவைகளின் குரல்கள் நிரப்பின.

நமது பழைய அகராதிகள் எரிக்கப்பட்டு புதிய சொற்களால் ஆன மென்பொருள் தகடுகளைப் பரிமாறிக் கொண்டோம்.டுவிட்டரின் சங்கேதங்களை விஞ்சுவதாய் இருந்தன பொது வெளியில் நமதேயானதாய் நவின்று பிதற்றிய நார்சிச சொற்கள்.முந்தைய காதல்கள் பன்றிக் காய்ச்சல் வந்து இறந்த பிரேதம் போல் அறுவைக்கு உட்பட்டது.பிளாக்பெர்ரியின் சமிக்ஞை கோடேறாத அலுவலக பட்டறை ஒன்றின் பொழுதில் முன்னொரு நூற்றாண்டில் மூழ்கிய கப்பலுக்குள் சிறையிருப்பது போலவும் சாம்பல் உதிரும் பிரம்மாண்ட எலும்புக் கூடாய் உலகம் மாறிப் போனது போலவும் நெடுஞ்சாலையின் தார் எந்திரமாய் நுரையீரல் கருக்கினோம்.

பிரார்த்தனை முடிந்த பெருஞ்சபையின்
கடைசியாய் பிரியும் விரல்கள்
மெழுகுவர்த்தி மேடையில் பற்ற வைத்து
போகின்றன காலியான சிரிஞ்சை

புறாக்களுக்கான தானியங்கள் விசிறியபடி
பேசத் துவங்குகின்றன
யாருமற்றதாகிவிட்ட
தொலை பேசி எண்ணை அழைத்து

இருந்த நதியின் மணல் வெளி
கிளர்த்தப் பெற்று
தீராத வெம்மையை சுமக்கும் பின்னிரவு
பெண்ணுடலாய்

அந்தியின் இறுதிப் பறவை நிழல்
மின் கம்பங்கள் மலர்த்திய பின்னும்
தாழ்ந்துயரவில்லை
சிரிப்பது போல் குரலிருக்கும்
பறவையின் கூடிருக்கும்
அந்தக் கிளை


ஆலிவ் பழங்கள் புதினா இலைகள் மிதக்க எலுமிச்சை கவ்விய வோட்கா கோப்பை ஒன்றின் தொடர்ந்த போதையில் உனது ஆய்வறிக்கையின் கையெழுத்துக்கு உரிய பேராசிரியனுடனான பட்டறை இராவின் பின்
ஐ பாட் உடன் ஐ பில் அட்டையும் கைப்பையின் ரகசிய அறைகளை கைப்பற்றியது.மூணாற்றின் படகு வீடுகளில்.இந்திய ரயில்வேயின் "பேலஸ் ஆன் வீல்ஸ்"சில் கொல்லேகால் கொனே நீர்வீழ்ச்சிகளில் நானும்.ஆனால் பிக்சல் அளவும் பிசகாத பாசாங்குகள் நுரைத்தபடி இருந்தன நம் உரையாடல்களில்.

பழவேற்காட்டின் செல்வந்த சினேகிதன் அழைத்த கூத்து நாள் மாலையில் ஆய்வறிக்கை சமர்பிக்கும் நேர்முகம் நீடிப்பதால் அழைக்க வேண்டாமென்ற குரல் செய்தி அனுப்பியிருந்தாய்.படகு விருந்துக்கு கல்லூரிப் பெண்ணொருத்தி வருவதாகவும் சென்ற முறை அவள் சிணுங்கல் பேச்சும் செய்நேர்த்தியும் செவ்வனே இருந்ததால் மீண்டும் அழைப்பதாகவும் புதைத்த பானத்தின் போதையில் பேசிக் கொண்டிருந்தான் பெருவயிற்று புரவலன்.ஆடும் படகும் இலைப் புகைத்த போதையும் நிலவறை இருட்டில் ஆனந்த உறக்கத்தில் புரண்டு கிடந்தேன்.அனைவரும் முடித்தாயிற்றென்றும் மிஞ்சி இருப்பது என் முறை என்றும் எலுமிச்சை சாறோடு எழுப்பிய கூட்டுக்காரன் கைகாட்டிய திசையில் தற்காலிகத் திரை கடந்து... கடந்து..... ஐ-பாட் தோடுடை நீ....
பிறகான பொழுதுகளில் ஐ பில் பொய்த்த உன் கருக்கலைப்பு படிவத்தில் கையெழுத்திட அழைத்த போதும் எனக்கான காவல் நிலைய பிணைப் படிவத்தில் உன் ஒப்பம் கேட்ட போதும் நம் கைபேசிகள் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தன .எல்லாப் பிழைகளுக்கும் அப்பால் நிரூபிக்க கேட்கப்படும் பிரியத்தில் படிந்திருந்தது சந்தேகத்தின் நிழல்கள்.தன் அசுத்தங்களை மறைக்க எதிராளியின் குற்றங்களை ருசுப்படுத்துவதிலேயே குரூரங்கள் வளர்த்து திரியத்துவங்கின பச்சை உதிரம் ருசித்து பழகிய விலங்கின் பழுப்பு நிற பற்களைப் போல....

சாம்பல் மேட்டில் கிடைக்கப் பெறும்
எலும்புகள் பிணைக்கும் தகடுகளாகி விட்டன
பிரியத்தின் சொற்கள்

பழக்கப்பட்ட மிருகம்
நிரூபித்தாக வேண்டியிருக்கிறது
பிரதி நொடிதோறும்

பிடிபட்ட போராளியின் நிர்வாணத்திற்கு
பிறகும் ஆயுதங்கள் தேடும் கரங்கள்
தம் ஆயுதங்களை இயக்கத் துவங்குகின்றன

மாமிசம் மெல்லத் தேடும் செயற்கை பல்வரிசை
அங்கீகாரம்

நுண்ணுயிர் யுத்தம் நிகழ்த்தும்
ரசாயன கரங்களில் இருந்து விடுவித்துக் கொண்ட
இன்னாளில்

கிளையை இரை போல் பற்றி
பாடுகிறது தன் வனமடைந்த பறவை

பென்சில் மரப் பூ

சட்டமிட்ட வெய்யில் தொங்கும் சுவர்
ரேகை கிளை விரிக்காத கரங்களின்
அடீமஸ் இசைச்சுவடி

ஒளியின் கல்லறை மேகம்
கால்மிதியின் உப்புக்கறை


ஜரிகை எறும்புச் சாரைக்கு
எதிர்வரிசை
வெற்றிடம்
கிடக்கும் உடல்

வெளியேறுகையில் கடைசியாகவும்
நுழைகையில் உடலை முந்தியும் நுழையும்
நிழலை பழக்கியிருக்கும் இவ்வீட்டில்

இருளில் இருந்து
பகிரப்பெறும் சூதாட்ட அட்டைகளாய்
வெளியேறிக் கொண்டிருக்கின்றன நிழல்கள்

கடிகாரம் மட்டும் பேசும் வீட்டில்
பூனையின் கால் நகக் கால் இசைக்கும் பியானோ
குரல்கள்

போடாக்ஸ் சூழ் உலகு

புத்தகொக்குகளின் இமை மீது
மிதக்கும் மண்

வெட்கம் அதிகமுள்ள யானைகளின்
அரவமற்ற தரைஉறக்கம்

மின்மயானத்தில் சவரக் கண்ணாடி
மீது படிகிறது சாம்பல்

வெல்வெட் சியா வளர்த்துக்கொண்டிருக்கிறேன்
பாலை வாசம் மாறாமல்

நீல வளைய ஆக்டோபஸாக விரல்கள்
வளரத்துவங்கிய இரவில்
பாட்டிளினியம் நிறம் மாற்றத் தவறவில்லை


பசலை மாறாமல் புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன்
போட்டாக்ஸ் கசிய

புகையிரதம் - 1.

கிடங்குகளில் கொலையுறும்
நாய்களின் ஓலத்துடன் இரைகிறது
நிற்கும் ரயில்
முதல் பாதம் தாங்கு கட்டையை தொடர்கிறது

இரையோடு குனியும் தாய்ப் பறவைக்கு
ஒரு சேர திறக்கும் கூட்டின் அலகுகள்
ரோமம் முளைத்து கண்களாய்

அன்பின் தொழுகைக்குப் பிறகான அணைப்பாய்
மீதமிருக்கும் ரயிலுடன் தேகம் தருகிறார்கள்
காத்திருக்க கரங்கள் வாய்த்தவர்கள்

கடைசி நிறுத்தம் என்பதை எழுப்பிச்
சொல்லிகொண்டிருக்கிறாள் துப்புரவுப் பெண்
மரக் கிடங்கின் கீழ் வரிசை மரம் ஒன்றுக்கு


No comments:

Post a Comment