என் மௌனங்களின் காற்றலையில் உன் ஆதிக்கம் எனை சுற்றித் தீயாய் சூழ்கிறது, என் வார்த்தைகளைப் பற்றிக் கொண்டுவிட்டால் அவை வெகுவாகப் பரவுமென மௌனமாகவே இருக்கின்றேன். உனைமீறி நகர்ந்தால், தீயாய் அனைத்தையும் கருக்கிவிடுவேனென்ற உன் பயமுறுத்தல்களால் என் இருப்பை உருதியாக்குகின்றாய், என்றாலும் தகிக்கின்றேன் என்று எனை நெருங்கவும் தயங்குகின்றாய்.
என்றோ யாரோ எனை குடிசையெரிக்க தூண்டினார்கள் என்று எனை கண்ணாடிக் கூண்டிற்குள் எரிய விட்டுள்ளாய், எனைத்தூண்டினால் பெரிதாக வருவேனென்றே எனை உன் உள்ளங்கையிலேயே அடக்கியுள்ளாய், ஆனாலும் சுடுகின்றேன், சுடுகின்றேன் என்று கதறுகின்றாய்.
நான் உன்னளவில் தகிப்பதற்காய் நீ ஊறும் காரணங்கள்...
- நான் என் புத்திசாலித்தனத்தால் உனை மீறி விடுவேன்.
- உனக்கென நீ உருவாக்கியுள்ள போலி/தேவையற்ற ஒரு கௌரவத்தை தகர்த்துவிடுவேன்.
- நீ செய்யும் தவறுகளுக்காய் நான் உனை தண்டிப்பேன்.
- நீ புத்திசாலி என்ற உன் மாயையை கிளிப்பேன்.
- உன் சந்ததிகளின் அறிவை சூனியமாக்குவேன்.
- எனை மட்டுமே சார்ந்த ஒரு இன்பத்தை தேடத்துடங்குவேன்.
- உன் அதிகாரத்தை உடைப்பேன்.
- உன் உறவினர் முன் உனை மதிப்பிழக்கச்செய்வேன்.
- பிறர் ஏளனத்திற்கு உள்ளாக்குவேன்.
- பொருளாதாரத்திற்காய் உனை நாட மாட்டேன்.
- உன் நேரத்தையும், என் நேரத்தையும் வெருபடுத்துவேன்.
- இன்முகம் மறப்பேன்.
- பேச்சுக்கள் குறைப்பேன்.
- கேட்பதைக் குறைப்பேன்.
என்று நீளும் உன் காரணங்கள், என் தகிப்பை உன் மனதளவில் உருதியுடன் நிரந்தரமாக்குகின்றது. தீயாய் சுடுவதில் ஏதுமில்லை என்றே விளக்காய் எரிகின்றேன். விளக்கேற்றி வைக்கும் போது கூட, எத்தனை மெல்லிதாய் முடியுமோ அத்தனை மெல்லிதாய் சுடரேற்ற கற்றுக்கொடுக்கப்பட்ட நான், என் தகிப்பை குறைக்க கற்றிறுக்க மாட்டேனா.
உலகிற்கே வெளிச்சம் கொடுக்கவேண்டிய அவசியம் எனக்கு இருந்ததில்லை, தேவையுமில்லையென்றாலும் என் மீதான உன் ஆதிக்கம் வெளியுலகை நோக்கிய என் பயணத்தை தூண்டுகின்றது. உனைமீறி நகர்ந்தால், தீயாய் அனைத்தையும் கருக்கிவிடுவேனென்ற உன் பயமுறுத்தல்களால் என் இருப்பை உருதியாக்குகின்றாய், என்றாலும் தகிக்கின்றேன் என்று எனை நெருங்கவும் தயங்குகின்றாய்.
இன்று என் உருவம் மாறி, மின்விளக்காய், வண்ணங்களுடன் கொள்ளை அழகுடன் எரியும் போதும் மின்சாரமாய் என்னுள் ஒடுவதாய் ஒரு எண்ணத்திலிருக்கின்றாய், என் தகிப்பு இல்லை எனவே எனை சந்தேகிக்கின்றாய். என் மீதான உன் ஆதிக்கமும், பயமுறுத்தல்களும் தளம் மாறியுள்ளனவேயன்றி பொருள் மாறவில்லை., என் மௌனங்கள் இன்று பேசக்கற்றுக்கொண்டன.
நான் தகிப்பதில்லயெனவே வெளியேறத் தயங்குவதில்லை,
நீ புதிதாக உன் ஆதிக்கங்களை மாற்ற வழி தேடிக்கொண்டுள்ளாய், நான் கட்டுப்படுதலின் சுகத்தை மறந்துகொண்டுள்ளேன்.
நீ உன் புத்திசாலித்தனத்தை வெகுவாக பெருக்கிக்கொண்டுள்ளாய் நான் அதைப் பார்த்து மயங்கும்/மறுளும் என் மனப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளேன்.
நீ கருக்கிவிடுவேனென்ற உன் பக்கத்தை நியாயப்படுத்துகின்றாய், நான் மெதுவாக குளிர்ந்து கொண்டுள்ளேன்.
நீ கேள்விகளை சிக்கலாக்குகின்றாய், நான் வாக்குவாதத்தை குறைத்துக்கொண்டுள்ளேன்.
நீ உன் தவறுகளை மறைக்கக் கற்றுக்கொண்டுள்ளாய், நான் உனை கவனிப்பதை நிறுத்தக் கற்றுக்கொண்டேன்.
என்றாலும் உன் ஆதிக்கத்தினுள்ளே தான் நான் உள்ளேன், நீ தான் அதை நான் மீறிவிட்டதாய் மருகுகின்றாய், நான் மீறுவதாக உனை நினைக்கத்தூண்டியதே என் வெற்றியென நான் நினைக்க, நான் மீறுவது மட்டுமே என் தோல்வியாக உலகில் பறைசாற்றுகின்றாய். என் எந்த ஒரு மாற்றத்தையும், ஏமாற்றமாக மாற்றக்கற்றுள்ளாய், ஏமாற்றங்களின் உலகிலும் இன்பமாய் இருக்க நானும் கற்றுக்கொண்டுவிட்டேன்.
Friday, 25 September 2009
ஏமாற்றங்களின் உலகம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment