Pages

Tuesday, 29 September 2009

அமைச்சர்களின் பாதுகாப்பு செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் : மங்கள சமரவீர

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், அமைச்சர்களுக்குப் பாதுகாப்புக்காக 50 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அதிகமான குண்டு துளைக்காத வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறைக்கப்பட வேண்டும்" என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் எம்.பியுமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

இலங்கையில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பிலும் இதனால் நாட்டில் ஏற்படும் பாதுகாப்பு செலவினம் குறித்தும் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ராஜகிரிய ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி மக்கள் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு கூட நமது நாட்டு ஜனாதிபதிக்கான பாதுகாப்புகளைப் போல் வழங்கப்படவில்லை. ராஜபக்ஷ குடும்பத்துக்கான பாதுகாப்பும் அந்த குடும்பங்களின் உறவினர்களில் இருந்தே பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிப்பதும் வரையறையை மீறுவதாக உள்ளது.

ஜனாதிபதியின் பாதுகாப்புக்கென குவிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை 50 ஆகக் குறைப்பதன் ஊடாகவும் அதேபோல் அநாவசிய வாகன விரயத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவரது பாதுகாப்புக்கென வழங்கப்பட்டிருக்கும் வாகனங்களை ஐந்தாக குறைப்பதற்கும் தேசிய பாதுகாப்பு சபைக்கு நான் ஆலோசனை வழங்குகிறேன்.

நாட்டின் நலன்கருதி தேசிய பாதுகாப்பு சபை, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பான் முறைப்பாட்டினைச் சமர்ப்பிக்கும் போது, அது தொடர்பான விசாரணைகளை நேரடியாக நடத்தும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும்.

சூழ்நிலைக்கேற்ப, பாதுகாப்பு செயலாளர், படை அதிகாரிகள் ஆகியோர் இது தொடர்பில் கலந்தாலோசித்து ஒரு தீர்வினை எடுக்க வேண்டும்.


விமான சேவைகள் நஷ்டம்

இதுவரை காலமும் இலாபத்தில் இயங்கிவந்த நிறுவனங்கள் இன்று நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதற்குக் காரணம் இன்றைய அரசாங்கமே.

1980 ஆம் ஆண்டிலிருந்தே விமான சேவையாற்றிவரும் நிறுவனம் இலங்கை விமான சேவை. இன்று இது நஷ்டத்தில் இயங்கும் நிலை தோன்றியுள்ளது.

வெளிநாடுகளிடம் கடன்வாங்கி அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இன்று கொழும்புத் துறைமுகம் வீழ்ச்சி அடைந்து காணப்படுகின்றது. துறைமுக ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தென்மாகாண சபை தேர்தலுக்காகப் பல அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு மோசடிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

No comments:

Post a Comment